சிம்புதான் வட சென்னையின் முன்னாள் ஹீரோ: தனுஷ் அதிரடி

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் தயாரித்து நடித்துள்ள படம் வட சென்னை. இப்படத்திற்கு தணிக்கை வாரியம் ‘ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது. இதனையடுத்து இப்படம் வரும் 17ஆம் தேதி திரைக்கு வருகிறது.
இந்த நிலையில், இப்படக்குழுவினர் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய நடிகர் தனுஷ், வட சென்னை படத்தில் சிம்புதான் முதலில் நடிக்க வேண்டியது எனக் கூறினார்.
இதுகுறித்து அவர், பேசியதாவது..
வடசென்னையின் ஆரம்பம்
“கடந்த 2004ஆம் ஆண்டிலிருந்தே வட சென்னை படம் பற்றி நானும் வெற்றிமாறனும் பேசிக்கொண்டிருந்தோம். ஆனால் அன்றைய சூழலில் இவ்வளவு பெரிய படத்தை நிச்சயம் எடுக்க முடியாது என்பதில் வெற்றிமாறன் மிகத் தெளிவாக இருந்தார். ஆடுகளம் படம் முடிந்த பிறகு வட சென்னை செய்யலாம் என்று பேசினோம்.
சிம்பு தான் ஹீரோ
ஓரு சிறிய இடைவெளிக்குப் பிறகு இருவரும் மீண்டும் வருவோம் என வெற்றி சொன்னார். எனக்கு அது சரியாக பட்டது நானும் அதற்கு ஓகே சொல்லிவிட்டேன். கொஞ்சநாள் கழித்து வெற்றிமாறன் போன் செய்து, சிம்புவை வைத்து வடசென்னை படத்தை எடுக்கப்போவதாகச் சொன்னார். நானும் நல்ல விஷயம் பண்ணுங்க என்றேன்.
நானும் மனிதன் தான்
மீண்டும் போன் செய்து, இப்படத்தில் ஒரு கேமியோ ரோல் இருக்கிறது நீங்கள் பண்றீங்களா எனக் கேட்டார். அதற்கு நான் முடியாது என சொல்லிவிட்டேன். எனக்கு அவ்வளவு பெருந்தன்மை கிடையாது. நானும் மனுஷன் தான்.
மீண்டும் என்னிடம் வந்தது
அதன்பிறகு அப்படம் வேறு சில காரணங்களால் கைவிடப்பட்டது. பிறகு வெற்றிமாறன் விசாரணை திரைப்படம் எடுத்தார். பிறகு மீண்டும் இப்படம் என்னிடம் வந்தது. இப்படம் என்னிடம் வந்ததற்கு மிகவும் சந்தோஷப்பட்டேன். ஏனென்றால் ஒரு நடிகருக்கு இப்படிப்பட்ட படம் கிடைப்பதற்கு அதிர்ஷடம் வேண்டும்.
அமீரின் பங்கு
படம் மிக நன்றாக வந்துள்ளது. அமீர் மிகச்சிறப்பாக நடித்துள்ளார். அமீர் நடித்த பாகத்தை மட்டும் தனியாக ரிலீஸ் செய்வேன் என வெற்றிமாறன் ஷாக் கொடுத்தார். ஒரு பாகமாக ரிலீஸ் செய்ய முடியாது என்பதால் மூன்று பாகங்களாக எடுத்தோம்.
சிறப்பாக நடித்துள்ளனர்
அதேபோல் படத்தில் நடித்துள்ள கிஷோர், சமுத்திரக்கணி, ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா எல்லோருமே சிறப்பாக நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் மிகச் சிறப்பாக இசையமைத்துள்ளார்” எனக் கூறினார்.